கற்பனைத் தெரு அல்ல . . .
எங்கள் தெருவில்
எக்ஸ்ட்ரா ஹார்டு
சிமெண்ட் ரோடு
வழுவழு வென உள்ளது.
தினமும் குப்பை சேராமல்
துப்புரவுப் பணி
துரிதமாய் நடக்கிறது
மின்சாரம் சீராய் வருகிறது.
பாதையில் இருமருங்கும்
பச்சை மரங்கள் இலைகளில் எந்தச் செம் மண் தூசும்
படியாமல் பரிணமிக்கிறது.
கனரக வாகனம் செல்லத் தடையாய்
சாலையின் இருமுனையிலும்
தண்டவாளக் கம்பி தடுப்பும் இருக்கிறது
எங்கள் தெருவில் வாயுபகவான் சுத்தம் செய்ய
வருண பகவான் நீர் தெளிப்பது மட்டுமே பாக்கி
அப்படி என்ன,
மந்திரமா இருக்கிறது எங்கள் தெருவில் என
மலைத்துவிடாதீர்கள் யாரும் !

எதிர்த்தவீட்டுப் பையன் படிக்கும்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -
என்ற
பாடலும் கேட்கிறது
எம் தெருவில் மந்திரி வீடும் இருக்கிறது . . .